வல்லமையாளர் விருது – பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்

மூலம் – http://www.vallamai.com/?p=57103

மே 4, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்

prof deivasundaram2

தமிழகத்தின் இக்கால இளையதலைமுறை பல்கலைக்கழக பட்டம் பெற்றிருந்தாலும் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையோ அல்லது சரளமான ஆங்கிலத்தில் தங்கள் கருத்துகளை உரையாடல்வழிப்  பகிர்ந்துகொள்ள இயலாமைக்கோ காரணம் ஆங்கிலம் பயன்பாட்டு முறையில் கற்பிக்கப்படாததே என்பது மொழியியல்துறை வல்லுநர்கள் கருத்து. தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் ஆங்கிலம் அறியாததால் தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் பெற்றோர்கள் அவர்களை ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளில் சேர்த்தாலும், அங்கு பயிலும் மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும், மனனம் செய்து கற்கும் கல்விமுறையில் அவர்கள் கற்பது பெற்றோர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. மொழியியல்துறை பயிற்சி இக்குறையை நீக்க இயலும். உலக நாடுகளில் மொழியியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் பொழுது, இத்துறை தமிழக அரசின் மெத்தனத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மிகவிரைவாக இன்று அழிவுநிலையை நோக்கிச்  சென்றுகொண்டுள்ளது. இதனைப் பற்றிய எச்சரிக்கையைவிடுத்து சென்ற சனிக்கிழமை வெளியான தினமணி நாளிதழின்  “அழிவின் பிடியில் மொழியியல் துறை” கட்டுரைக்கு வழங்கிய தமது செவ்வி மூலம் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் மொழியியல் வல்லுநர் பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். மொழியியல் துறையின் முக்கியத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரும், அதைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய இடையூறுகளை எடுத்துரைத்த பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் இளங்கலைப் பட்டமும், தமிழ், மொழியியல் புலங்களில் முதுகலைப் பட்டம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கணினிமொழியியல் (computational linguistic) வல்லுநர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியியல் துறை, ஆராய்ச்சியாளர் பலரை அத்துறையில் உருவாக்கிய அத்துறை, அவரது பணி ஓய்விற்குப் பிறகு பல்கலைக் கழகத்தின் நிதிஒதுக்கீட்டினை இழந்து, பல்கலைக்கழகத்தின் அக்கறையின்மையால் நலிந்துவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியாவர், தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்தவர் என்ற பல பெருமைகளை உடையவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்.

prof deivasundaram3

மொழியியல் பாடமென்பது எல்லா மொழிகளைப்பற்றியும் பொதுவாக அறிந்துகொள்ளும் துறை, ஆய்வு நோக்கம் அதன் அடிப்படை. எழுத்து வடிவம், வாக்கிய அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து படிக்கும் திறமையை வளர்ப்பது மொழியியல் துறையின் பின்னணி. கல்லூரி மொழியிலக்கியப் பாடங்களில் 40 விழுக்காடு பாடத்திட்டம் மொழியியலை அடிப்படையாகக் கொண்டது. இப்பாடத்தைப்படிப்பது இலக்கிய வகுப்புகளில் படிப்பது அறிவியல் அடிப்படையில் மொழிகளை ஆராய்ந்து  அணுகும் தன்மையை உருவாக்குகிறது. இதனால் ஆங்கில, தமிழ் மொழிப்  பாடங்களை பயன்பாட்டுமுறையில் கற்பிக்கும் திறமையையும் ஆசிரியர்கள் பெறுவார்கள். இக்காரணத்தினால்  கல்வி நிறுவனங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது இன்றியமையாததாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் பட்டம் பெற்றவர்களை பல்கலைக்கழகங்கள் பணிக்கமர்த்தின. ஆனால், மொழியியல் துறையில் பெறப்பட்ட முனைவர் பட்டம் இலக்கிய முனைவர் பட்டங்களுக்கு ஒப்பானதல்ல என்ற அரசாணையை இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மொழியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்களாக அறிவித்து அவர்கள் தகுதிநீக்கமும் செய்யப்பட்டனர். இதனால் மொழியியல் பட்டதாரிகளை பணிக்கமர்த்துவதையும் கல்விநிறுவனங்கள் கைவிடத் தொடங்கின. இதன்விளைவாகப் பணிவாய்ப்புகள் குறைந்து இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் எண்ணிக்கையும் அருகிவிட்டது. இவ்வாறாக ஆசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், ஆங்கிலம் தமிழ் கற்பித்தலும் பாதிக்கப்படும் என்று  கல்வியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தமது பணி ஓய்விற்குப் பிறகு NDS Lingsoft Solutions Pvt Ltd மொழித்தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரும், இவருடன் இணைந்து பணியாற்றிய மொழியியலாளர்களும், கணினித்துறை மென்பொருள் பொறியாளர்களும் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த “மென்தமிழ்” – தமிழ்ச்சொல்லாளர் (a Tamil word processor) மென்பொருள் பணியை முன்னெடுத்து வருகிறார். இவரது “தமிழ்ச்சொல் 2000″ என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.

prof deivasundaram4

கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக ‘மென்தமிழ்’ மென்மம் விளங்குகின்றது. ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி, இணைச்சொல் / எதிர்ச்சொல் அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி என இதில் ஆறு வகையான அகராதிகள் உண்டு. இம்மென்பொருள் இயல்மொழி ஆய்வு மற்றும் மொழிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவக்கப்பட்டது. ஒருங்குறி எழுத்துக்கள், குறியீடு மாற்றி, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, மொழிமாற்றி போன்ற பலவகையான வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும், அகரவரிசைப்படுத்துதல், சொல்லடைவு, எண் எழுத்து மாற்றி, கோப்பு மாற்றி, மற்றும்  மைக்ரோசாஃப்ட் 2007 வோர்ட் ப்ரோசெசசெர் போன்ற வடிவமைப்பு போன்ற முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள். மின்னஞ்சல் உட்பட்ட பதிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு சொற்செயலிதான் மென்தமிழ் மென்மம். இதற்கு முன்னதாக இத்தகையதொரு முழுமையான சொற்செயலி மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் கணினித் தமிழ் தேடலில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வரும் தமிழக சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில், 2013-ஆம் ஆண்டின் “முதல்வர் கணினித் தமிழ் விருது”க்கு முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பபட்டு சென்ற மாதம் விருது வழங்கி பாராட்டப்பட்டார். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கானப் பணிகளைப்   பாராட்டி வழங்கப்பவது இந்த விருது. தமிழையும் மொழியியலையும் தொழில்நுட்பத்துக்குத் தக்கவாறு  தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத்  தொடர்ந்து பணியாற்றிவரும் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கணினிவழி தமிழ் மொழிபெயர்ப்பு, மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் தமிழை ஒலிவடிவாகக்  கணினியே படிக்க வழி செய்வது போன்ற முயற்சிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இத்தகைய தமிழிலக்கியம், மொழியியல், கணினிமொழியியல் பின்புலம் கொண்டவர் கருத்தைப் புறந்தள்ளாது தமிழ அரசு என நம்புவோம். உலகில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் எல்லாத் துறைகளிலும் மொழியியல் பாடம் உள்ளது. மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம் ஆனால், மொழியியலின் முக்கியத்துவத்தைத் தமிழகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களது அறிவுரையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்போம். இத்தகைய தமிழ் சான்றோரைப் பாராட்டி வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை மின்னிதழ் பெருமை கொள்கிறது.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

தகவல்களும் படங்களும் தந்துதவிய கீழ்காணும் தளங்களுக்கு நன்றி:

https://muelangovan.wordpress.com/

http://tamil.thehindu.com/tamilnadu/article6038477.ece

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=21848:2012-11-01-07-00-6&catid=1535:162012&Itemid=780

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s